31 December, 2016

விட்டதை தொடரு.

தோல்வி என்று எண்ண வேண்டாம்.  சோம்பேறித்தனம் என்று வருந்த வேண்டாம்.
மனதில் எண்ணமிருக்கிறது. செயல் படுத்த வேண்டும் என்ற குறி இருக்கிறது. எண்ணமும் குறியும் இருந்தால் போதாதா? வெற்றி பெறவேண்டுமென எழுதியா உள்ளது? எண்ணமும் செயலும் முடிவில்லாமல் இருந்தால் போதாதா?
முயற்சி இருக்கிறது. முயற்சியில் மீண்டும், மீண்டும் துவண்டாலும்  மீண்டெழ துணிவுள்ளது.
விட்டத்தைப் பார். விட்டதை  தொடரு. எண்ணங்கள் வராமல் அவஸ்த்தைப் படு.
சொற்களை ஜோடனை செய்ய முடியாமல் தவிப்புரு.
இந்த எழுதும் செயல்பாடு ஒருபுறமிருக்க,
எழுதுவது அப்புறம்தான்.
முதலில் குடும்பத்தை கவனி. வேலையை கவனி. அப்புறம் எழுதலாம்.
கொஞ்சமாக எழுதலாம். எண்ணங்களை  நூறு வார்த்தைகளில் கொண்டு வர வேண்டும்.
நல்லதோ, கெட்டதோ, பிடித்தமான யோசனையோ, பிடிக்காத யோசனையோ - யோசித்து வைப்போம். வார்த்தைகளில் யோசனைகளை கொணருவோம்.
2016 - டிசம்பர் 31 அன்று வந்த யோசனைகளை வடித்து விட்டேன்.
இப்ப என்ன யோசனை நின்று விட்டதா? யோசனைகள் நின்று விடலாமா?
கூடாது.கூடாது.

31 December, 2015

வருடம் 2016, 366 நாட்கள் கொண்ட வருடம். என்ன செய்வதாக உத்தேசம்?


சந்தோஷமாக எழுதுவதற்கு இன்னொரு ப்ராஜக்டை செய்து கொள்கிறேன். அதாவது நூறு வார்த்தைகள் எழுதுவது. 'கேள்வியும் நானே  பதிலும் நானே' ப்ராஜெக்டும் தொடரும்.  

நூறு வார்த்தைகள் கொண்ட ஒரு பாரா, ஒரு விஷயம், ஒரு...மனதில் தோன்றுவது எதுவோ அது. எழுதுவது ஒரு சந்தோஷம் கொடுக்கிறது. சந்தோஷத்தை அனுபவிப்போம். அவ்வளவுதான்.

தோன்றுவதை உடனே எழுத முயற்சிக்க வேண்டும். சில சமயம் பிரமாண்டமான கவிதைகளும், தகவல்களும் 'சல சல ' என்று மனதில் உதயமாகிறது. உதயமாகட்டும். அதை அனுபவிச்சுக்க. எழுதி, மேலும் சந்தோஷம் கொள்ள வேண்டுமா என்ன?

ஆமாம். எண்ணங்களுக்கு ஒரு அமைப்பு கொடுத்த மாதிரி ஒரு feel! மனதை படம் பிடித்து விட்டேன் என்ற மகிழ்வு.

முயற்சிப்போம். 2016 ல் 366 நாட்கள் உள்ளன. சந்தோஷத்தை படம் பிடிப்பது இரட்டை ட்ஜிட்ல வருதா அல்லது ஒற்றை டிஜிட்ல வருதா என்று பார்ப்போம்.

எண்ணங்களை படம் பிடிப்பது ஒரு பொழுதுபோக்கு. முயற்சி செய்கிறேன். மகிழ்சி. சந்தோஷம்.​


படம் இணையகத்திலிருந்து கூகிள் டிரைவில் சேகரித்தது.


--
cgbalu from Hubbali

19 January, 2015

ரிமோட் கருவியை தமிழில் எப்படி அழைப்பது?

கருவியை உபயோகித்து தமிழ் சானல் பார்த்தால்...தமிழ் ரிமோட்.
ஹிந்தி சானல் பார்த்தால் ஹிந்தி ரிமோட்.
கன்னட சானல் பார்த்தால் கன்னட ரிமோட்.
ரிமோட் கருவிக்கு தமிழில்....ம் ம் ம் ம் ம் ....ரி...மோ.......ட் ......
சன் டி வி யில் நல்லா கலாய்க்கிறாங்கப்பா....
"சொல்லுங்க அண்ணே சொல்லுங்க" நிகழ்சியில் இமாம் அண்ணாச்சி பசங்கள நல்லாவே கேள்வி கேக்குறாரு.
ரிமோட் கருவிக்கு தமிழில் என்ன சொலுவார்களென்றால்....
"தொலையுணர்வு கட்டுப்பாட்டுக் கருவி."
Watch http://youtu.be/IsJpUkBA6zk
--
cgbalu from Hubbali

23 September, 2014

விகடன் வாசித்த விவரத்தை விளக்குங்களேன்.

அந்தக் காலத்தில் ஜோக் அட்டைப் படத்துடன் கூடிய குமுதம் அளவிலான விகடனை படித்துக் கொண்டிருந்தேன் என்று ஆரம்பிக்க மாட்டேன். (குமுதத்தை விட ஒரு சுற்று பெரிசு விகடன்)
பெரிய அளவிலான விகடன் வாசிப்பு குறைச்சல் தான். இருந்தாலும் விகடன் வாசிப்பு வரப் பிரசாதம் தான்.

நிற்க.

சொல் வனம் சரியாக இருக்கா? கேள்வியைப் பாருங்க. வார்த்தைகளை வ'கரத்திலேயே அமைத்துள்ளேன்.
சொல் வனம் பகுதி நல்ல வளமாக உள்ளது விகடனில்.
வாசகர்கள் வனப் பகுதியை நன்கு வளப் படுத்துகிறார்கள்.

ப. தியாகு எழுதிய இந்த சொல் வனத்தை பாருங்களேன்:

 மிடறு மிடறாக....
சற்றே தகிக்கிறது என்றாலும்
மறுக்கவியலாது
அது
ஒவ்வொரு மிடறிலும்
இனிப்பதையும்,
தேநீர்போலும்
வருமிந்த
ஊடல்.

கவிதைப் பக்கத்தில் ஒரு குழந்தை வகுப்பெடுக்கும் நேர்த்தி, அப்படியே அதை உங்களுடன் பகிர மனம் விழைகிறது.​​

எல்லாம் செய்கிறேன். ஆனால் சிறுகதை வாசிப்பு அபூர்வமாக அமைகிறது. சுப்ரபாரதிமணியன் எழுதிய  "இது அழகிகளின் கதையல்ல"  ஒரு நெருடலை எற்படுத்தியது. 

வாசிப்புக்கு சிறந்தது சில கட்டுரைகள். நடப்புக் கட்டுரைகள். பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம்.." நல்ல பேச்சு. மகளிர்  சுற்றுலா செல்லுகையில் ஏற்படும்  இன்னல்களை நன்றாகப் பேசுகிறது. ஒரு வரியை சுட்டு ட்வீட் ஆக்கினேன்.


வாசிக்கும் ரசனையை பற்றி இதுவரை வரைந்தேன். (வ...வா!!)

இதைத்  தவிர சமீப கால செய்திகள்....சினிமா செய்திகள் ...இன் பாக்ஸ் முதலியன.....இவைகளை பிறகொரு தரம் கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளாக் பாணியை நான் விகடன் பகுதியான நானே கேள்வி...  நானே பதில்...பகுதி போல் அமைத்துக் கொண்டுள்ளேன். ஒரு நாள்   இந்தப்பகுதியில் நான் எதாவுது எழுத வேண்டும் என்ற அவா உள்ளது.
--
cgbalu from Hubbali