பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் கேள்வி பதில் எது?
குமுதம் பத்திரிகையில் அரசு பதிலளித்தது. எஸ்.எ.பி ஆசிரியராக இருந்த காலமது. மனைவி உதவியுடன் ஒரு டயரியில் கத்தரித்து ஒட்டி வைத்துக்கொண்டுள்ளேன். அதை இப்பொழுது இந்த வலைதளத்தில் பதிவு செய்துகொள்கிறேன்.
எப்போதும் உற்சாகத்துடன் வாழ கற்றுக்கொடுக்கும் நூல்க்களில் சிறந்தது?
ராபர்ட் ஷுலர் என்று ஒரு புதுமுகம். நார்மன் வின்சென்ட்பீல் இருக்கிறாரே, அவர் கோத்திரம். அவருக்கு பாசிடிவ் திங்கிங். இவருக்கு? பாசிபிலிடி திங்கிங்.
ஷுலர் சொல்லுகிறார்:
1.சில சமயம் அடித்துப்போட்டாற்போல் களைப்பாக இருக்கும். உண்மையில் அது களைப்பு அல்ல. உடல் ஓய்வு எடுத்துக் கொள்கிறது. அவ்வளவுதான். ஓய்வு எடுத்துக் கொண்டானதும் பழையபடி உற்சாகமாக இருப்பீர்கள்.
2. சோம்பலால் சில சமயம் களைப்பு உண்டாகலாம். எழுந்திருங்கள். ஏதாவது செய்யுங்கள். தேக பயிற்சி, உலா இப்படி.
3. நம்மில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எக்கச்சக்கமான பலம், சக்தி இருக்கிறது. தேவை ஏற்படும்போது அது வெளிப்படும்.
4.ஏதாவது ஒரு குறிக்கோள், ஒரு லட்சியம் இருந்தால் உற்சாகம் தானே பெருக்கெடுக்கும். நோக்கமில்லாத வாழ்க்கை, பலத்தை உறிஞ்சிவிடும்.
5. "நம்மால் முடியாது. இதை எப்படி செய்து முடிக்கப் போகிறோம்" இந்த மாதிரி 'ஙே' எண்ணங்கள் உதவாது.
6. தன்னம்பிக்கையில்லாத தோல்விவாதிகளுடன் சேராதீர்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள். நல்ல சுறுசுறுப்பானவர்கள், வெகு உற்சாகமுள்ளவர்கள் - இவர்களுடனேயே உறவு வைத்துக் கொள்ளுங்கள்.
7. "சோர்ந்து போய்விட்டேன்" என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். "சுறுசுறுப்பாக இருக்கிறேன். உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை என்னுள் சக்தி பாய்கிறது .... நான் பலசாலி ! நான் பலசாலி! " என்று சொல்லிக்கொள்ளுங்கள். பொய்தான். சொல்லச் சொல்ல, பொய்யே உண்மையாகும்.
8. வாரத்துக்கு ஒரு முறையேனும் கோவிலுக்குப் போங்கள்.
9. அவனிருக்க பயமேன்? துணிவுடன் வாழ்க்கை நடத்துங்கள்.
10. அட்வான்ஸாக நன்றி தெரிவிக்கப் பழகிக்கொள்ளுங்கள். "ஆண்டவனே! என்னுள் எவ்வளவோ சக்தியும் திறமையும் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த உதவியதற்கு நன்றி. எனக்கும் பிறருக்கும் அதனால் நன்மை ஏற்பட வழி செய்ததற்கு நன்றி. நான் எப்போதும் உற்சாகம் உள்ளவனாக இருக்கிறேன். அதற்கு நன்றி." என்பது போன்ற பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.
ஷுலர் உண்மை பேசுகிறாரோ ரீல் விடுகிராறோ? தெரியவில்லை. ஒரு முறை பரீட்சை பண்ணிப் பார்த்தால் போயிற்று.
அடுத்த பதிவிற்கான கேள்வி: மனோதிடமான நம்பிக்கை என்பது என்ன?
இந்தப்பதிவை படிப்பவர்களும் கேள்விகளுக்கு அவர்கள் மனதில் தோன்றும் பதிலை எழுதலாம்.
ஏதாவது கேள்வி கேட்க தோன்றினால் கேட்கலாம். ஆனால் பதில் தெரிந்தால் தான் பதிவு செய்ய முயற்சிப்பேன்.
--
cgbalu from Hubbali